ondragstart="return false" onselectstart="return false"

February 21, 2010

GPRS என்றால் என்ன? துறை சார்ந்த விளக்கம்

GPRS இன் தமிழ் பெயர் பொதுப்பொட்டல வானலைச் சேவை (General Packet Radio Service).

GPRS இணையத்தின் சேவைகளைச் செல்பேசி வரை கொண்டு சேர்க்க கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகள் (WAP) பயன்பட்டது. இந்த வரைமுறையைப் பயன்படுத்தி இணைய இணைப்பு வேகத்தினை அதிகரிப்பதே இந்த GPRS இன் நோக்கம் . இச்சேவை எவ்வாறு ஏற்படுத்தப்படுகிறதென்பதைக் காணுமுன் சில செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

சுற்றிணைப்பு மாற்றம் (Circuit Switched) : இது சாதாரணமாய் நம் தொலைபேசி இணைப்பகங்கள் பயன்படுத்தும் இணைப்பு முறை . செல்பேசியில் நாம் பேசும் போதும் (Voice) இவ்வகை இணைப்பே பயன்படுத்தப்படுகிறது . இவ்வகை இணைப்பினை ஏற்படுத்தினால், இணைப்பைத் துண்டிக்கும் வரை உங்களுக்கு ஒரு தடம் (Channel) ஒதுக்கப்படும். நீங்கள் தொடர்பு ஏற்படுத்தியபின் பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது பேசாமல் மௌனம் சாதித்தாலும் தடம் உங்களுடையது தான். எவ்வளவு நேரம் இணைப்பு இருக்கிறதோ அவ்வளவு நேரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் . செல்பேசியில் பேசுவதற்கு நீங்கள் தள நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்துகையில் ஒரு நேரத்துண்டு ( Timeslot) உங்களுக்கு வழங்கப்படுகிறது . இந்த நேரத்துண்டுதான் தடம். நீங்கள் பேசி முடிக்கும் வரை இந்த நேரத்துண்டு உங்களுடையது தான் . இதுபோல் இவ்விணைப்பினைப் பயன்படுத்தி இணையத் தொடர்பு ஏற்படுத்துகிறீர்கள் எனலாம். பேசுகையில் எவ்வாறு ஒரு நேரத்துண்டு வழங்கப்பட்டதோ அதேபோல் தன் தற்போது தரவுப் பரிமாற்றத்துக்கும் ஒரு தடம் வழங்கப்படும் . செல்பேசியில் ஒரு குறிப்பிட்ட இணையப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது தரவுப் பரிமாற்றம் எதுவும் நிகழ வில்லை எனலாம் . என்றாலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடம் உங்களுடையதுதான். இணைப்பை நீங்கள் துண்டிக்கும் வரை அத்தடம் உங்களுடையதே.


பேச்சுப் பரிமாற்றத்துக்கு இவ்வகை சுற்றிணைப்பு மாற்றம் பயன்மிக்கதே. ஆனால் தரவுப் (Data) பரிமாற்றம் செய்கையில் தொடர்ச்சியாக ஒரு தடம் நமக்கு இணைக்கப்பட்டிருத்தல் அவசியமற்றது. உதாரணமாய், உங்களுக்கு வந்த மின்னஞ்சலை செல்பேசியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனலாம். அந்த நேரத்தில் தரவு எதுவும் தள நிலையத்திலிருந்து அனுப்பப் படவில்லை . ஆனால் உங்களுக்குக்காக ஒதுக்கப்பட்ட தடம் பயனின்றி உங்களுக்காகவே இணைப்பிலிருக்கிறது . மீண்டும் வேறு தகவல்களை நீங்கள் செல்பேசியில் தரவிறக்கம் செய்து பார்க்கும்வரை அந்தத் தடம் பயன்படுத்தப்படுவதில்லை, வீணடிக்கப்படுகிறது.

ஆக, எப்போதெல்லாம் உங்களுக்குத் தரவு அனுப்ப/பெற வேண்டுமோ அப்போது மட்டும் உங்களுக்கு ஒரு தடம் ஒதுக்கப்பட்டால் போதுமானது அல்லவா ? தொடர்ச்சியாய் ஒரு தடம் இணைப்பிலிருப்பது , தடத்தினை வீணடிக்கும் செயல்தான் . ஒரு தள நிலையத்தில் ஒரு குறித்த நேரத்தில் எட்டு நேரத்துண்டுகள் (எட்டுத்தடங்கள்) எட்டுச் செல்பேசிகளுக்கு வழங்கப்படலாம் என்று முன்னர் படித்தோமல்லவா ? பேச்சுப் பரிமாற்றத்துக்கெனில் , எட்டுச் செல்பேசிகளுக்கு எட்டு நேரத்துண்டுகள் தொடர்ச்சியாய் வழங்கப்படலாம் . உங்கள் செல்பேசி தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், தரவுப்பரிமாற்றம் நிகழ்கையில் மட்டும் அந்த நேரத்துண்டை அந்தச் செல்பேசிக்கு வழங்கலாம். தரவுப் பரிமாற்றம் முடிந்ததும் , அந்நேரத்துண்டு விடுவிக்கப்பட்டு பிற செல்பேசிகளுக்கு வழங்கப்படலாம். மீண்டும் சிறிது நேரத்தில் நீங்கள் வேறொரு இணையப்பக்கத்தைப் பார்க்க விழைந்து ஒரு பட்டியைச் சுட்டினால் , எந்த ஒரு செல்பேசிக்கும் வழங்காமல் எஞ்சியிருக்கும் ஏதாவது ஒரு நேரத்துண்டில் உங்களுக்குத் தகவல் அனுப்பப் படலாம்.

இவ்வாறு தொடர்ச்சியாய் ஒரு குறித்த தடம் ஒதுக்காமல், எப்போதெல்லாம் தரவுப் பரிமாற்றம் இருக்கிறதோ அப்போது மட்டும் ஒரு தடம் ஒதுக்கித் தகவல் பரிமாற்றம் செய்வதைப் பொட்டல இணைப்பு (Packet Switched) என்று அழைக்கலாம். கணிணிகளிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் இணைப்பில் இவ்வழியிலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது . அலுவகத்தில் ஏறப்டுத்தப்பட்டிருக்கும் வலையமைப்போ, அல்லது இணைய வலையமைப்போ , எல்லாவகை கணினி வலையமைப்புகளிலும் இவ்வகைப் பொட்டல இணைப்புத்தான். செல்பேசியிலும் இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்த இந்தச்சேவை துணை புரிகின்றது.

செல்பேசி இணைய வேகத்தினை எவ்வாறு அதிகரிப்பது என்பதை இப்போது பார்ப்போம். ஒரு தள நிலையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் செல்பேசிகள், பேச்சோ, தரவோ பரிமாறிக்கொள்ள வேண்டுமெனில் ஒரு நேரத்துண்டினைக் கேட்டுப்பெற வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஒரு வினாடியில் 9.8KBits அளவே தரவு அனுப்ப முடியும். ஆனால் இது ஆமை வேகம். என்ன செய்யலாம்?

சாதாரணமாய், பேச்சோ, தரவோ செல்பேசியிலிருந்து அனுப்ப/ பெறப் படும்போது பேச்சு/தரவு அப்படியே அனுப்பப்படுவதில்லை. பாதுகாப்புக்காரணம் கருதி (அதாவது எவரும் இடைமறித்துக் கேட்டாலும் அவர்கட்கு விளங்காத வண்ணம்) குறியீடு (Coded) செய்தே அனுப்பப் படுகின்றன. இந்தக்குறியீட்டுத்தகவல்களைக் கொஞ்சம் குறைத்தால் , சற்று அதிகப்படியான தகவல்கள் அனுப்ப முடியும் அல்லவா? எப்படி குறியீட்டுத்தகவல்களைக் குறைப்பது?. உதாரணமாய் நான்கு தரவுத்தகவல்கள் இருப்பதாய்க் கொள்வோம். ஒவ்வொரு தகவலையும் நான்கு குறியீட்டு தகவல்களால் குறித்தால் , 4X4 = 16 தகவல்கள் அனுப்பப் பட வேண்டும். 16 தகவல்கள் அனுப்பினாலும் , எதிர்முனையில் அது பெறப்படும் போது மீண்டும் குறியீட்டை நீக்கி நான்கு தகவல்களே பெறப்படும். சரி , நான்கு குறியீட்டுத் தகவல்களுக்குப்பதில் இரன்டு குறியீட்டுத் தகவல்கள் பயன்படுத்தினால்? 8X2 =16; எட்டுத்தகவல்களை அனுப்ப முடியும் ! குறியீடே செய்யாமல் அனுப்பினால்? 16 தகவல்கள் அனுப்ப முடியும்.

சரி, நாம் ஜி எஸ் எம் சேவைக்கு (GSM) வருவோம். தரவு அனுப்பப் படும்போது குறியீட்டுத்தகவலோடு ஏற்றி அனுப்பினால் ஒரு வினாடிக்கு 9.05 கிலோபிட்ஸ் தான் தரவு அனுப்ப முடியும். குறியீட்டுத்தகவல்களைச் சற்றே குறைத்து அனுப்பினால் 13.4 Kbits வரை அனுப்பலாம். குறியீட்டுத்தகவலை இன்னும் கொஞ்சம் குறைத்தால்? 15.6 Kbits வரை தரவுப் பரிமாற்றம் செய்யலாம். குறியீட்டுத்தகவலே வேண்டாம் என்கிறீர்களா? அப்படியானால் 21.4 KBits வரை அனுப்பலாம்.

ஆக, ஒரு நேரத்துண்டைப் பயன்படுத்தி, தரவுத்தகவலை குறியீட்டுத்தகவலோடு ஏற்றாமல் அனுப்பினால் அதிகபட்சம் 21.4 Kbits வரை ஒரு வினாடிக்கு தகவல் அனுப்பலாம். 21.4 Kbits என்பதும் குறைவான வேகமாய்த்தான் தெரிகிறது. இன்னும் வேகத்தை அதிகரிக்கலாம் என்கிறீர்களா? அதற்கு என்ன செய்வது?

தகவல் பரிமாற இப்போது ஒரு நேரத்துண்டைத் தானே பயன்படுத்துகிறோம்! ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டை ஒரே நேரத்தில் ஒரு செல்பேசிக்கு வழங்கினால் என்ன? நல்லதொரு திட்டம். ஒரு குறித்த நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நேரத்துண்டுகளை ஒரு செல்பேசிக்கு வழங்கி, இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்கலாம் ?? எப்படி என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.

துறை சார்ந்த இவ்வாறான் பதிவுகளுக்கு நீங்கள் தரும் ஆதரவைப் பொறுத்து.... இன்னும் சில துறை சார்ந்த பதிவுகளை இட எண்ணியுள்ளேன்...




3 comments:

மாலி நடராஜன் said...

நன்றி - அப்படியே கொஞ்சம் CDMA மற்றும் அதன் இந்திய எதிர்காலம் பற்றி எழுதவும்

Varma said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாலி நடராஜன்..

CDMA பற்றி எழுத இருக்கின்றேன்.. ஆனால், நான் இலங்கையைச் சேர்ந்தவன். இந்தியாவின் தற்போதைய தொலைத்தொடர்பு நிலைமை அவ்வளவாகத் தெரியாது.இருப்பினும் முயல்கின்றேன். நன்றி.

Geetha6 said...

good post..
udtgeeth.blogspot.com

Post a Comment

Related Posts with Thumbnails