ondragstart="return false" onselectstart="return false"

May 6, 2010

செல்போனில் பயன்படும் WAP என்றால் என்ன? துறை சார்ந்த விளக்கம்


இப் பதிவானது நம் செல்போனில் இணைய இணைப்பை ஏற்படுத்தப் பயன்படும் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை (Wireless Application Protocol , WAP) ஜப் பற்றியது. இது முற்று முழுதாக துறை சார்ந்த விளக்கம்.

[இப் பதிவில் சில ஆங்கில சொற்பதங்கள் பாவித்துள்ளேன்.. அவை தவிர்க்க முடியாதவை. மன்னித்து விடுங்கள்...]

கம்பியில்லாத் தொடர்பு சாதனங்களாக செல்போன், PAGER, PDA, உள்ளங்கைக் கணினிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். WAP இன் பிரதான தொழிற்பாடாக கம்பியில்லாத் தொடர்பு சாதனங்கள் இணைய (Internet) இணைப்பைப் பெற உதவுவதைக் குறிப்பிடலாம். அதாவது, கணனி மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த இணைய வரைமுறைகள் (IP) எவ்வாறு உதவுகின்றதோ, அது போலத் தான் கம்பியில்லாத் தொடர்பு சாதனங்களில் இணைய இணைப்பினை ஏற்படுத்த WAP பயன்படுகின்றது.


செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருந்த/இருக்கும் நோக்கியா, எரிக்ஸன், மோட்டரோலா மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து 1997-இல் இந்தக் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைக்குச் செயல் வடிவம் கொடுத்து வெளியிட்டன.

கொஞ்சம் ஆழமாக சொன்னால்,
1997ஆண்டு காலகட்டத்தில் செல்பேசியின் திரை சிறியதாகவும், கறுப்பு வெள்ளைத் திரைகளும் தான் இருந்தன. அந்தக்காலகட்டத்தில் இந்த WAP இனை செல்பேசியில் பயன்படுத்த, செல்போனில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருந்தது. அவற்றில் முக்கியமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
  • இணைய உலவியானது கணனியில் இணையப் பக்கங்களைக் காட்ட பயன்படுகின்றதோ, அதேபோல் தான் கம்பியில்லாத் தொடர்புசாதனங்களில் இணையப் பக்கங்களை பார்க்க இணைய உலவி தேவைப்படும். இதனை குற்றுலாவி (Micro Browser) என அழைப்பார்கள்.
  • இணைய உலாவியில் பயன்படுத்தப்படும் குறியீட்டு மொழியான மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) போன்று, செல்போனில் குற்றுலாவிக்கும் ஒரு குறியீட்டு மொழியை அறிமுகப்படுத்தினார்கள்.அதனை கம்பியில்லாக் குறியீட்டு மொழி (Wireless Markup Language , WML) எனக் குறிப்பிடப்படும்.இது மீயுரைக்குறியீட்டு மொழியை விட எளிதானது. குறைந்த அளவிலான ஒட்டுக்களையே (Tags) கொண்டது .
பொதுவாக நம் செல்போனில் இணைய இணைப்பை ஏற்படுத்த முக்கியமாக செல்போசியானது பின்வரும் வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.
  • செல்பேசியில் WAP வசதி இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு சேவை வழங்கியவர்கள், உங்களுக்கு இணைய இணைப்பிற்கான அமைப்புகளை (Settings) வழங்கியிருக்க வேண்டும் , அதாவது எந்த எண்ணை அழைப்பது, வழங்கி அல்லது நுழைவாயிலின் முகவரி (Gateway address), பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவை.
  • சேவை வழங்கியவர்கள் தனது வலையமைப்பில் ஒரு வழங்கி அல்லது நுழைவாயில் (Gateway) ஒன்றை நிறுவியிருக்க வேண்டும் . இந்த நுழைவாயில் தான் உங்கள் செல்போனை இணையத்திற்கு இணைப்பதற்கு உதவுகின்றது.
  • இணையத் தள இணையப்பக்கங்கள் WAP இனைக் கொண்டு தனது சேவைகளை வழங்க வேண்டும். பொதுவாக, இணையப்பக்கங்களில் நிறைய படங்கள் மற்றும் தகவல்கள் இருக்கும். ஆனால், செல்போன் மூலம் அவற்றைப் பார்க்க குறைந்த அளவு படங்களாகவும் மற்றும் குறைந்த அளவு நினைவிருப்பிடம் கொண்ட பக்கங்களைச் செல்பேசிகளுக்கென தனியாக வடிவமைத்தல் வேண்டும்.

எப்படி செல்போன் குற்றுலாவி (Micro Browser) தொழிற்படுகின்றது?

எமது செல்போனில் இணையத்தை இணைக்க இணையதளத்தின் முகவரியினை உள்ளிட்டு அனுப்பும் போது...
செல்போனிலிருந்து வரும் கம்பியில்லா குறியீட்டு மொழியானது (WML) நுழைவாயிலில் (Gateway) வைத்து தகவல்களை HTML மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு இணையத்திற்கு அனுப்பப்படுகிறது . அதுபோல், இணையத்தில் இருந்து வரும் HTM மொழியில் அமைந்த தகவல்கள், செல்போன் புரிந்து கொள்ளும் மொழிக்கு அதாவது WML ஆக மாற்றப்படுகிறது.

செல்போனில் இணைய இணைப்பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...

இந்த வகை இணைப்பின் வேகம் மிகக்குறைவு. அதாவது, ஒரு விநாடிக்கு 9.8 Kbits வரை மட்டுமே பெற முடியும். எனவே தான் ஒரு இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டுமெனில் வெகு நேரம் எடுக்கின்றது. கவனிக்க வேண்டியது என்னவெனில், இணைப்பு ஏற்படுத்திய பின் தரவு அனுப்பப் பட்டாலும் சரி, அனுப்பாவிட்டாலும், இணைப்பு இருக்கும் நேரம் முழுவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.


செல்போனில் இணைய இணைப்பில் இருந்த இவ்வாறான சிக்கல்களை நீக்க பிற்காலத்தில் (1999 க்குப் பின்) படிப்படியாய் செல்போனில் இணைய இணைப்பிற்கு WAP உடன், மீயுரைப் பரிமாற்று வரைமுறையும் (HTTP) சேர்த்து அறிமுகப் படுத்தப்பட்டது. மேலும், இணைய வேகத்தை அதிகப்படுத்த பொதுப் பொட்டல வானலைச் சேவை (GPRS) அறிமுகமானது.

GPRS ஜப் பற்றி எனது முந்தைய பதிவுகளில் வாசித்து அறிந்து கொள்ளலாம். அதனை வாசிக்க இச்சுட்டியை அழுத்துங்கள். பகுதி 1 மற்றும் பகுதி 2

WAP ஜப் பற்றிய இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், மற்றவர்களும் அறிந்து கொள்ள ஓட்டைக் குத்த மறந்திடாதிங்க சார்...
அடுத்த பதிவில் சந்திப்போம்...


இப்பதிவை PDF ஆக தரவிறக்குக



2 comments:

chokkar said...

நல்லா இருக்கு நண்பா

நானும் ஒரு இடுகை போட்டு உள்ளேன்

http://chokkar.blogspot.com/2010/07/chokkar-displaying-links-to-related.html

mani said...

very informative.. இன்னும் இதுமாதிரி
பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails